அருள்மிகு சொரிமுத்து ஐய்யனார் திருக்கோயில்

சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையாரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.


முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.மகாலிங்கம், சொரிமுத்தைய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மரட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடிமாடசாமி, மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர்.

சிறப்பம்சம்: பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இள வயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார். அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

செருப்பு காணிக்கை: இப்பகுதியில் வசித்த பிராமணரான முத்துப்பட்டன் என்பவர், பிராமண குலத்தில் பிறந்து, சூழ்நிலை காரணமாக தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்த இரு பெண்களைக் காதல் திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு ஜாதியில்லை என்பதை முதன் முதலாக நிரூபித்த இவர், பசுக்களைப் பாதுகாக்கும் ஒரு போரில் பங்கேற்று மரணமடைந்தார். அவரை பட்டவராயன் என்று அழைத்து, இந்தக் கோயிலின் ஒரு பகுதியில் சன்னதியும் எழுப்பினர். பொம்மக்கா, திம்மக்கா என்ற தம் மனைவியருடன் பட்டவராய சுவாமி அருள்கிறார். இவர் பிராமணராயிருந்தும், தன் மாமனார் உத்தரவுப்படி, காதல் திருமணம் செய்து கொள்வதற்காக, செருப்பு தைக்கும் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக இவரது சன்னதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக கட்டுகின்றனர். முதல் ஆண்டு கட்டப்படும் செருப்பை மறுஆண்டில் போய் பார்த்தால் அது தேய்ந்திருக்கும். பட்டவராயரே இந்த செருப்புகளைப் பயன்படுத்துகிறார் என்று பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர். இது வனப்பகுதி என்பதால் ஆட்களும் அதிகம் செல்வதில்லை. செல்பவர்களும் இந்த செருப்புகளைத் தொடுவதுமில்லை. அப்படியிருந்தும், செருப்புகள் தேய்வது, கலியுக அதிசயமாகவே இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால், கால்நடைகள் நோய்கள் இன்றி இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், கிராமப்புற மக்கள் ஏராளமாக வருகின்றனர்.

இரட்டை யானை விநாயகர்: கோயில் வளாகத்தில் இலுப்பை மரம் இருக்கிறது. இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர். பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. இது பக்தர்களின் காணிக்கையை சுவாமி, ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக இருப்பதாக சொல்கிறார்கள். இம்மரத்திற்கு கீழே சங்கிலிபூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றன. அருகிலேயே ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் இரண்டு யானைகள் இருப்பது வித்தியாசமான அமைப்பு  கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, லிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு லிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே தர்ம சாஸ்தாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் அய்யனார் என்பர். அய்யன் என்றால் தலைவன். இதில் மரியாதைக்காக ஆர் விகுதி சேர்ப்பர். பக்தர்களுக்கு அருளைச் சொரிபவர் என்பதால் இவர் சொரிமுத்து ஐய்யனார் எனப்பட்டார்..  

Comments

Popular posts from this blog

திருநெல்வேலி பெயர் காரணம்

மாவட்ட அறிவியல் மையம் - திருநெல்வேலி

ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி